கொங்கு நாட்டுப் பறவை காடை. பறவையின் பெயர்களை, குலப்பெயர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ், செடி, கொடிகளைப் பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள் தாம். இவர்களும் கொங்கின் குடி மக்களே. கரிகாலன் காலத்தில் காடுகெடுத்து நாடாக்கப்பட்டது கொங்கு நாடு எல்லாருந்தான் செய்தார்கள். காடு கெடுத்தவர் காடை ஆனது இல்லை. இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை. காடல் காடை ஆனார் என்பதும் தவறு. மூவேந்தர் எல்லை சிக்கல் வந்த போது மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் காடை குலத்தினரும், சந்தி செய்து வைத்தனர். விஜயநகரப் பேரரசு காலத்தில் கோயில் சிற்ப மண்டபங்கள் தமிழகத்தில் நிறைந்தன. பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமை பெற்று இருந்தனர். பூந்துறைப் புட்பவன நாதர் கோயில் பணியைச் செய்தார்கள்.
"காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன்" மாடையும் தெய்வ அமுதும் இட்டான் என்று கொங்கு மண்டலச் சதகம் கூறும். வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்தனாம். சூரிய, சந்திரன் இருக்கும் வரை இது நடக்க வேண்டும் என எண்ணினான்.
பூந்துறை காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம் பெற்றார். இவர்கள் கொலை புரிந்த நன்னன் வழியினர் அல்லர். நன்மை பல செய்த சிறப்பால் நன்னன் என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கரூர்ப்பசுபதி ஈசுவரர் கோயில் கலசம் குடமுழுக்கில் நில்லாதிருந்தது. இந்த நன்னா உடையார் வைத்தபின் நின்றதாம். நல்ல குணமுடையோர் செயல் நன்றாகும், நிலைக்கும். மூவேந்தரும் நன்னா உடையார்க்கு, பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமையை வழங்கினர். புகழ் நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும் மூவேந்தர் சூட்டும்முடி என்ற பழம் பாடல் இதனை உணர்த்தும். சோழர் ஆட்சியில் இவர் குறுநில மன்னராக இருந்தார். காங்கேய நாட்டுக் காடையூரை உருவாக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு. கீரனூர், பில்லூர், பெருந்துறை, கோனூர், ஆத்தூர், பவுத்திரம் ஆகிய ஊர்களின் இவர்கள் காணிகளாம். பிற குலத்திற்கு இல்லாத சிறப்பு இவர்களுக்கு உண்டு. காணி கொண்ட ஊர்ப் பெயருடன் சேர்த்து கொள்கின்றனர். பூந்துறைக் காடை, மேலைசார் காடை, கீழைச்சார்க்காடை, எழுதுமத்தூர் காடை, கீரனூர்க் காடை, அரசூர்க்காடை, பறற்பினிக்காடை, பத்திரக்காடை, வையப்ப மலைக் காடை, கூடச் சேரிக்காடை, ஆனங்கூர்க் காடை என்று 18 காடைக் குலத்தினர் உண்டு.