கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதேய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணகுவதுடன் தனது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.