About Kongu Kulam

பயிரன்குலம்

பயிர் செய்து வாழ்வோன் பயிரன். கொங்கு வேளாளர்களில் பயிர்த் தொழிலையே நம்பி வாழ்கின்றவர்கள். புறநானுற்றில் "நெடுமான் நெற்றின், பைம்பயறு உதிர்த்த" (புறம் - 297) என்று தொடர் வருகிறது. பைம்பயறு - பாசிப்பயறு. பயறு வகைகளைச் சிறப்பாகப் பயிரிடும் குலத்தினர் பயிரன் குலத்தினர் என்றும் கூறலாம். `படியளந்துண்ணும் பயிரன்` எனும் தொடர் இவர்கள் புகழ் கூறும். அன்னக் கொடி உடையவர்கள் என்பர்.

சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்டான். உத்தமச் சோழன் படையெடுத்து வந்தான். சேர, சோழ, பாண்டியர்களுக்கு இந்தக் கொங்கு நாட்டின் மீது எப்போதும் நாட்டம் இருக்கும். கொங்கு நாடு காரணமாவே, மூவேந்தர் பகை தொடர்ந்தது. பாண்டியன் தோற்றான். காரையூர் சர்க்கரைப் பாண்டியனுக்கு உதவியாகப் போர் மேல் சென்றான். சோழன் தோற்றான். அதனால் மகிழ்ந்த பாண்டியன் கரியான் சர்க்கரைக்கு `உத்தமக் காமிண்டன்` என்ற பட்டம் கொடுத்தான். காரையூர், வல்லியரைச்சல், முத்தூர், மருதுறை ஆகிய ஊர்களை ஆளும் உரிமை நல்கினான். வேப்ப மாலை சூட்டினான். மீன் கொடி தந்து காங்கேய நாட்டுப் பட்டக்காரர் ஆக்கினான். `நல்லசேனாபதி` என்ற விருது அளித்தான், அதுமுதல் 29 வழிமுறையினர் பாண்டி மன்னர்களின் படைத் தளபதிகளாக இருந்தனர். திறை செலுத்தினர். பாண்டியர்கள் சார்பில் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தார்கள். `பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்கள்` பேரும் புகழும் பெற்று கொங்கினத் தலைவர்களாகவும் இருந்தனர். பயிரன் குலக்காளியண்ணக் கவுண்டர்கள் சிவபெருமானையே வணங்கினர். மேல் பூந்துறை நாட்டிற்கும், காங்கேய நாட்டிற்கும் முல்லைப் போர் இருந்தது. காங்கேய நாட்டாரும், பூந்துறை நாட்டாரும் வஞ்சியங் குளம், சேனாபதி பாளையம் அருகில் சண்டை நடந்தது. பயிரன் குலத்தார் போரிட்டு காங்கேயத்தை தக்க வைத்தனர். ஆனூர், பவுத்திரம், பாலத்தொழுவு, பழையக் கோட்டை, பரஞ்சேர்வழி, வெள்ளோடு வெள்ளியணை, கொன்றையாறு, கொடுமணல், நாமக்கல் ஆகியன பயிரன் குலத்தாரின் காணி ஊர்களாம்.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.