கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு. தேன் பூந்தாது, குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மருத நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று கெழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். “குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்” என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள். “கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி” (குறுந் 1) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும், “கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்” (சிறுபா 184) எனக்கூறும்.
தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார். “கொங்கு முதிர்நறு விழை” (குறிஞ் 83) என்ற குறிஞ்சிப்பாடல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது. சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு என்றே நாடுகள் தமிழகத்தில் இருந்தன. பின் தொண்டைநாடு சேர்ந்தது. கொங்கு நாட்டைக் காடு கொடுத்து நாடு ஆக்கியவன் கரிகாலன். கொங்கு நாட்டு மக்களை வைத்தே காவிரிக்குக் கரை கட்டினான், கல்லணை கட்டினான். உலகில் மக்கள் தோன்றிய இடம் இலமோரியாக் கண்டம் என்றனர். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியினர் தமிழர்கள். உலகில் பாரத நாடு புண்ணிய பூமி. பாரத நாடு பழம் பெரும் பூமி என்றார் பாரதி. நோபெல் பரிசு பெற்ற பிரஞ்ச் எழுத்தாளர் கூறுவது (1915) ரோமன் ரோலண்டு கூறுவது உலகை ஒரு பெண்ணாக உருவப்படுத்தினால் அவளுடைய முகம் பாரதம். கடலை ஆடையாக உடுத்திய பெண்ணிற்கு நெற்றிப் பொட்டுத் தமிழகம் என்றார் சுந்தரம் பிள்ளை.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்றனர். சங்க காலத்தி நாடு என்றே இருந்தன. சோழர் காலத்தில் மண்டலங்கள் ஆயின. கொங்கு மண்டலம் எனப்பட்டது. சோழ மண்டலம், சேர மண்டலம், பாண்டிய மண்டலம் என இருந்தன. சங்க காலத்திலேயே கொங்கு நாடு என்று இது வழங்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கொங்கர் எனப்பட்டனர். கிள்ளி வளவனை கோவூர் கிழார் பாடிய புறம்-373 ஆம்பாட்டில்,
"மைந்தராடிய மயங்கு பெருந்தானைக், கொங்குபுறம் பெற்ற கொங்குவேந்தே"
என்று பாடினார். கொங்குக்குறுநில மன்னன் ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அண்ணல் யானை எண்ணில் கொங்கர்.
"குடகடல் ஓட்டிய ஞான்றை" - (புறம் -130)
என்று பாடினார்.
"பல்யானை செல்செழுகுட்டுவனை ",
பாடலைக் கெளதமனார்.
"ஆகெழு கொங்கர் நாடகப்படுத்த", வெல்கெழுதானை வேருவருதோன்றல் - (பதிற் -28)
என்று பாடினர். இதில் குறிப்பிட்ட கொங்கர் தான் கொங்கு வேளாளர்கள். பெருஞ்சேரல் இரும் பொறையை அரிசில் கிழார் பாடினார். கொங்கர்கள் ஆற்றல் மிக்க படையினர் என்றார்.
"சேண் பரல்முரம்பினீர்ம் படைக் கொங்கர் ஆபரந்தன்ன செலவில்"
கொங்கு வேளாளர்களின் பசுகூட்டங்களைப் போலவே அவர்களின் படைகளும் பரந்திருந்தன என்றார். சங்க காலப் பெருமை பெற்ற கொங்கு நாட்டைப் பிற்காலத்துச் சுந்தரரும் “கொங்குகிற் குறும்பில் குரக்குதளியாய்” என்றே பாடினார். இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார். கண்ணகி கொங்கு நாட்டின் செல்வியாக, கற்புத் தெய்வமாக உள்ளாள். கொங்கு நாட்டு வேளிர் பெருமக்கள் வழிபடுவதால் கொங்கச் செல்வி என்றார். கண்ணகியை மாரியம்மனாக கொங்கு நாட்டில் வழிபடுகின்றனர்.