History of Kongu Nadu

நதிகளும், தலங்களும்

கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து, சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து, காஞ்சியாறு, பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. சரவண பவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆறு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு. திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம். அவிநாசி, நாமக்கல், பவானி, வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வெஞ்மாக்கூடல், திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். `கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்` என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்.

கொங்கு நாட்டை ஆண்டவர்கள்

கரிகால் சோழன் காலம் கி.மு 60 - 10-ஆகும் என்பர். இவனைப் பாடியவர்கள் கிளாத்தலையார், பரணர், கபிலர் என்பவர்களாம். இவன் வெண்ணிப் போரில் சேரனையும், பாண்டிய மன்னனையும் கொங்கு நாட்டு 11 வேளிர்களையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். கொங்கு நாட்டை நாடாக்கியவன் இவன். இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேள் மகளை மணந்தான், கரிகாலன் பிறந்தான். கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். இருங்கோவேள் என்ற கொங்கு நாட்டு வேளிர் அரசனை அடக்கி வைத்தான். கொங்கு நாட்டைக் காடு கெடுத்து நாடக்கினான். கொங்கு வேளாளர்களைத் தொண்டை நாட்டு 24 கோட்டங்களில் குடியேற்றினான். இவனால் குடியேற்றப்பட்டவர்கள் தான் தஞ்சைக்குச் சென்று தாராபுரம் குடிபுகுந்தனர்.

சேரன் செங்குட்டுவன் கொங்கு நாட்டை ஆண்ட பேரரசன். இவனது ஆட்சிக்காலம்-கி.பி. 150 - 205. இவனைச்சிலம்பில் இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கின்றார். கொல்லிமலை கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகும். சோழ நாட்டின் வடமேற்கு எல்லையாகும். இந்தக் காலத்தில் தான் வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன் கொல்லி மலையை மீட்டுத் தனியாக ஆட்சி புரிந்தான். அதியமானும், தனியாட்சி செய்தான். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி மாநகர் கரூரும் தலைநகராக ஆக்கப்பட்டது.

செல்வக் கடுங்கோ வாழியாதன், பெருஞ்செரலிரும்பொறை, இளஞ்சேரலிரும்பொறை, மாந்தரஞ்சேரலிரும்பொறை ஆகியோர் இத்தலைநகரிலிருந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள். பெருஞ்சேரலும், இளஞ்சேரலும், நாமக்கல் வேட்டாம் பாடியில் பாசறை அமைத்துத் தங்கினர். நாமக்கல் கொங்கு வேளாளர் பிட்டன்கொற்றனை, படைத்தலைவனாக வைத்திருந்தனர். கி.பி 130 - 180 இல் இவர்கள் கொங்கு நாட்டை ஆண்டனர். காரியுடன் சேர்ந்து முதலில் ஓரியைக் கொன்றனர். பின் அதியமானையும் கொன்றனர். கொல்லி மலை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பிட்டன் கொற்றனிடம் கொல்லி மலையை ஒப்படைத்தனர். செங்கணான் கி.பி. 250 இல் சோழநாட்டை ஆண்டான். இவன் கொங்கர்களையும் வஞ்சிக்கோவையும் வென்றான் என்று சோழர் வரலாறு கூறும். இந்தக் கொங்கர்கள் கொங்கு நாட்டு வேளாளர்களே, சுந்தரர், செங்கணானை உலகமாண்ட தென்னாடன் குடகொங்கச் சோழன் என்று புகழ்ந்தார். மகேந்திர வர்மனும், அவன் மகன் நரசிம்ம வர்மனும் கொங்கு நாட்டைத்தழுவி ஆட்சி செய்தனர். நாமக்கல் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், நரசிம்மர் குடவரைக் கோயில் ஆகியவைகளை அமைத்தனர். ஆஞ்சநேயர் சிலையும் நரசிம்மன் காலத்தில் செய்யப்பட்டது. குணசீலன் நரசிம்மன் மைத்துனன் இதனைச் செய்தான். கி.பி. 800 இல் ஆதித்தசோழன் தஞ்சையில் முடிசூடிக்கொண்டான். கொங்கு நாட்டு ஆட்சியை மேற்கொண்டிருந்தான். கொங்கு நாட்டைப் பாண்டியனிடமிருந்து மீட்டான். கொங்குவேளாளர் இனத்தைச் சார்ந்த விக்கியண்ணன் இவனது படைத்தலைவன். இவனது மனைவிதான் கடம்பமாதேவி. இவனுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை ஆகியவற்றைப் பெரும் உரிமையும் நல்கியிருந்தான்; செம்பியன் தமிழ்வேள் என்ற பட்டமும் கொடுத்தான். கி.பி. 1033 இல் இராசேந்திர சோழன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. இதனை கொங்க மண்டலம் எனப்பிரித்தான் என்று சோழர் வரலாறு கூறும். முதல் ராசராசன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. கொல்லிமலைக் கற்களைக் கொண்டுதான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். இவன் கி.பி.12.8.51 மூன்றாம் ராசராசனும் கொங்கு நாட்டை ஆண்டார்கள். இவன் காலத்தில் கொல்லிமலை நாடு அடங்கிய கொங்கு நாடு இவனது ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். 13-ஆம் நூற்றாண்டில் விஜய நகரப்பேரரசும் 13, 16-ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களும் கொங்கு நாட்டை ஆண்டனர். இதன்பின் முகமதியர் ஆட்சியும், ஆங்கில ஆட்சியும் வந்தது.

விஜய நகரப் பேரரசுக் காலத்தில் சாலிவாகன சகாப்தம் கி.பி 1443 இல் இராமதேவராயர் கொங்கு நாட்டை ஆண்டான். மதுரைவரையிலும் இவன் ஆட்சி இருந்தது. திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு. சேந்த மங்கலம், தாரமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பக் கோயில் மண்டபங்கள் கட்டப்பட்டன. இவன் கிருஷ்ணதேவராயர் மரபில் வந்தவன். உலகப்புகழ் பெற்ற சிற்ப மண்டபங்கள் இவைகள். எனவே கொங்குநாட்டிற்குச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறிகிறோம். கொங்குநாடும் கொங்கு வேளாளர்களும் தொன்மையான வரலாற்றிற்கும், பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்பதை அறிகிறோம் பதிற்றுப்பத்து அகம், புறம் ஆகிய சங்க இலக்கியங்கள் சங்ககாலக் கொங்கு வேளாளர் தம்வரலாற்றைக் கூறுகின்றன என்பதை அறிகிறோம்.

Gallery


Event & News


Mangala Valthu


Copyright © 2024 Global Kongu Foundation All rights reserved.