History of Kongu Vellalar

கொங்கு வேளாளர் வரலாறு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர். இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

சமுதாய அமைப்பு

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மையானவை

கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணியூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன. கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலைவர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்றளிக்கக் கூடும்.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.