About Kongu Kulam

கூறைக்குலம்

கொங்கு வேளாளர்கள் மணப் பெண்ணுக்கு கூறைப்புடவை எடுக்கின்றனர். கூறை என்பது இங்கே மணப்புடவை என்பர். புதுப்புடவை என்றும், பட்டுப் புடவை என்றும் பொருள் தரும் .புதுமை, மணம்,பட்டு என்ற பொருளில் கூறை வருகின்றது. பட்டுப் புடவை கூறிட்டு நெய்வதால் அது கூறைப் புடவை ஆயிற்று. மணமிக்கப் புதுமையைப் படைப்போர் கூறை குலத்தினர். வேணாட்டில் கூறை நாடு என ஒன்று உண்டு. அந்தக் கூறை நாட்டவரே கூறைக் குலத்தினர் என்றும் கூறுவர். கூறைக்குலத்தவர் குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது தவறு. கொங்கு மைந்தர்களே அவர்கள். கூறைக் கூட்டத்தினரின் காணி இடம் தலையநல்லூர். தெய்வம் பொன்காளியம்மன். தலைய நல்லூர் கொங்கு நாட்டு ஊர். ஈரோடு, நசியனூர், பெருந்துறை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், பகுதிகளிலும் கூறைக் கூட்டத்தினர் வாழ்கின்றனர். சென்னிமலை முருகனுக்கு விளக்கீட்டு நாளில் முதல் விளக்கு வைக்கும் உரிமை கொண்டவர்கள் கூறைக் கூட்டத்தினர். தலைய நல்லூரில் பங்காளி சண்டை வந்தது. அதனால் சிலர் நசியனூர் அருகில் ஓலைப்பாளையத்தில் பொன்காளியம்மன் கோவில் கட்டி வழிபட்டனர். மதுரை நாயக்க மன்னன் கூறைப்பாளையத்தில் குளத்து அமராவதிக் கவுண்டரை வரிவசூல் செய்ய வைத்தான்.

28 ஊர்களை இவர் பொறுப்பில் விட்டார். ஈரோடு, திருச்சி, அருகில் உள்ள கூர கூறைக் கூட்டத்தினர் அப்பத்தாள், பாவாத்தாள், தெய்வங்களை வைத்தனர். கூறைக் குல முத்தண்ணக் கவுண்டர் தீபாவளிக்கு எள் நெய்யும் புத்தாடையும் ஏழைகளுக்கும் வழங்கினார் என்று கந்தநாதசாமி சதகம் கூறுகிறது. 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாய்க்கன் காலத்தில் காறைக் கூட்டத்து தண்டிகைக் காளியண்ணன், கொடுங்கூர் - கொடுமுடி மகுடேசருக்கு நாள்படி, நந்தாவிளக்கு, வழிபடு பொருள் கொடுத்தானாம்; நந்தவனம், அமைத்தானாம். கொடுமுடிக் குறவஞ்சி கூறுகிறது. தலைய நல்லூர், மின்னாம்பள்ளி, சோமூர், சோழன் மாதேவி, திருமால் நசியனூர், வெள்ளியணை, மேச்சேரி, சௌதாபுரம், கொற்றனூர் பார்பதி, பிடாரியூர், மண்மலை, திண்டமங்கலம், நவணி, அரசிலாமணி, பொய்ப்புவியூர், காளம்பாடி, களங்காணி, ஆகிய ஊர்களை இவர்கள் காணியாகப் பெற்றுள்ளனர்.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.