கண்ணந்தை குல கொங்கு வெள்ளாளர்கள் மோகனூர் நாவலடியானையும், ஒருவந்தூர் செல்லாண்டியம்மனையும் காணி தெய்வங்களாக (குல தெய்வங்களாக) கொண்டவர்கள். இவர்களின் காணியூர்கள் கன்னிவாடி, கரூர் அமராவதி நதிக்கரை, கண்ணபுரம், பாப்பினி, வள்ளியறைச்சல், தாழம்பாடி, மோகனூர், சின்னியம்பாளையம், பொங்கன்பாளையம், நாமக்கல், வேட்டாம்பாடி ஆகிய ஊர்களாகும்.கண்ணன் குலத்து கிளையினர்தாம் கண்ணந்தை குலத்தினர் ஆவர்.
அமராவதிக்கரை கன்னிவாடியிலிருந்து கண்ணன் குலத்தவர் வன்னியர்களுடன் சண்டையிட்டு வெளியேறி அமராவதி ஆற்றைக் கடக்கும்போது முழு ஆடை நனையாமல் வந்தவர்கள் ஆதி நாட்டார்கள் என்றும், பாதி ஆடை நனைந்தவர்கள் ஆதிகண்ணன் என்றும், முழு ஆடையும் நனைந்தவர்கள் கண்ணந்தை என்றும் அழைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது. இவர்கள் கண்ணபுரத்தில் தங்கி கரியகாளியம்மனை வடித்து பூஜித்து வழிபாடு நடத்தினர். கண்ணந்தை குல பட்டயம் ஓன்று இந்த வரலாற்றை விரிவாகக் கூறுகிறது.
கண்ணந்தை குல மக்கள் பாப்பினியை காணியாகக் கொண்டு ஆட்சி செய்தனர். நயினாசலன் என்ற கண்ணந்தை குலத்தினன் பாப்பினியில் இறைவனை நாடிவரும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வந்தார். மேலும் விஜயநகர ஆட்சி காலத்தில் நசியனூரில் மூவேந்தர் சோழீஸ்வரர் திருக்கோவில் பணிகளை கண்ணந்தை குலத்தினர் செய்தனர் என்றும், வடஆற்காடு காவேரிப்பாக்கம் திருக்கோவிலுக்கு கண்ணந்தை குல எழுநூற்று வன்மன்றாடி என்பவர் ஆடுகளை நிவந்தமாக அளித்ததாக அவ்வூர் கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
கொங்குநாடு எங்கும் பரவிய கண்ணந்தை குலத்தினர் மோகனூர் நாவலடியானை குலதெய்வமாக ஏற்று, ஆரியூர் முத்துசாமி கோவிலுக்கும், ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கும் காணியாளர்கள் ஆகினர்.